July 9, 2021
தண்டோரா குழு
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கோவையில் பாஜகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தமிழக பாஜக தலைவராக பணியாற்றி வந்த எல்.முருகனுக்கு புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை மாற்றத்தில் மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அவர் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து இந்திய காவல் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று பாஜகவில் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்த அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்றைய தினம் அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதை தொடர்ந்து கோவை சித்தாப்புதூர் பாஜக அலுவலகம் முன்பு கோவை மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார் மற்றும் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.