February 18, 2021
தண்டோரா குழு
கோவை சங்கனூர் பகுதியிலுள்ள பழைய மின்னனு சாதன கிடங்கில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாயின.
கோவை கண்ணப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வின்.நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இவர் பழைய இரும்பு மற்றும் மின்னனு சாதனங்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.மேலும் கடந்த இரண்டாண்டுகளாக கோவை சங்கனூர் நல்லாம்பாளையம் சாலையில் பழைய மின்னனு சாதனங்கள் கிடங்கு அமைத்து தொழில் செய்து வருகிறார். இருபத்தைந்து செண்ட் நிலப்பரப்பில் அமைந்துள்ள அக்கிடங்கில் சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய இரும்பு மற்றும் மின்னனு சாதன பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
5 ஊழியர்கள் அங்கேயே தங்கி பணியாற்றி வரும் சூழலில் இன்று காலை சுமார் ஒன்பது மணியளவில் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கரும்புகை மிகப்பெரிய அளவில் எழுந்ததையடுத்து தீ விபத்து குறித்து அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவலளித்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு துறை அதிகாரிகள் மூன்று தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைத்தனர்.
மேலும் கிடங்கில் விபத்து ஏற்பட்ட போது பணியாளர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.எனினும் இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.