November 13, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தற்கொலைக்கு தூண்டியதாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்கொலை செய்துகொண்ட மாணவியின் வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்வேறு அமைப்புகள், சக மாணவிகளின் உறவினர்கள், பெற்றோர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்துகின்றனர். பாலியல் தொல்லை குறித்து பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவித்த போது, இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் வீட்டில் சொல்ல கூடாது என்று தெரிவித்துள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தொடர்ந்து தொலைபேசியிலும் குறுந்தகவல் அனுப்பிய தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது.
இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை கைது செய்ய வேண்டும் என்ற குற்றச்சாட்டை வைத்து போராட்டம் நடத்துகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து அங்கு வைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை அந்த உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.