February 22, 2021
தண்டோரா குழு
கோவையில் நடைபெற்ற பீனிக்ஸ் புக் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை புத்தக விழாவில் பல்வேறு துறை சார்ந்த 200 கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
கோவை காந்திமாநகரில் கிராமிய புதல்வன் எனும் அகாடமியில் கிராமிய கலைகளை இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் நாட்டுப்புற கலைகளை கற்று தந்து வருகிறார் டாக்டர் கலையரசன்.
இந்நிலையில் பல்வேறு துறையில் சாதனைகளை செய்யும் சாதனையாளர்களை பதிவு செய்யும் பீனிக்ஸ் புக் ஆப் வேல்ட் ரெக்கார்டு எனும் சாதனை புத்தகத்தின் நிறுவனராகவும் உள்ளார்.இந்நிலையில் பீனிக்ஸ் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை புத்தகத்தின் 2021 ஆம் ஆண்டிற்கான விழா கோவை பேரூராதினம் வளாகத்தில் நடைபெற்றது.
சாதனை புத்தகத்தின் நிறுவனர் டாக்டர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பேரூராதினம் மருதாச்சல அடிகளார்,திராவிடன் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் கோவை பாபு,கோவை மாவட்ட நடிகர் சங்க தலைவர் கோவை சாகுல், மதுரை அனுஷா ,ஓசோன் யோகா மையத்தின் இயக்குனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராமிய கலைஞர்கள்,யோகா சாதனையாளர்கள், பயிற்சியாளர்கள், தமிழ் கலை சார்ந்த ஓவியர்கள், பாடகர்கள், ஊடகத்துறையினர் என பல்வேறு துறை சார்ந்த கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
முன்னதாக விழாவில் சிறப்பு விருந்தினர்களுக்கு ஒயிலாட்டம்,பொய்க்கால் குதிரை,தப்பாட்டம்,கரகாட்டம் என தமிழ் பாரம்பரிய இசை,மற்றும் நடனங்கள் ஆடி வரவேற்பு அளிக்கப்பட்டது.