February 15, 2018
தண்டோரா குழு
கோவையில் பயணியை தகாத வார்த்தையில் திட்டிய தனியார் பஸ் கண்டக்டரின் உரிமத்தை ஆர்.டி.ஓ தற்காலிகமாக ரத்து செய்து அதிரடி உத்திரவிட்டார்.
கோவை – மேட்டுப்பாளையம் இடையே நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வேலைக்கு செல்ல தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் சென்று வருகின்றனர். இதில், தனியார் பேருந்து நடத்துநர்கள் மீதி சில்லறை தராமலும், தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வருவதாகவும் பயணிகளுக்கு நடத்துனருக்குமிடையே அடிக்கடி பிரச்சனைகள் வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (36). இவர் சமீபத்தில் கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு தனியார் பேருந்து சென்றுள்ளார். அப்போது, 50 ரூபாய் கொடுத்து மேட்டுப்பாளையத்திற்கு நடத்துநர் ஷேக் பரீதிடம் இரண்டு டிக்கெட் வாங்கியுள்ளார். 26 ரூபாய் டிக்கெட் கட்டணம், அப்போது ஓரு ரூபாயை ஜெயக்குமாரிடம் இருந்து வாங்கிய நடத்துநர் மீது சில்லறையை தரமால் இருந்துள்ளார். ஜெயகுமாரும் மூன்று முறை கேட்டும் மீதி பணத்தை தராத நடத்துநர் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வந்த பின் கொடுத்துள்ளார். இதனால், ஜெயகுமாருக்கும் நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, டிரைவர் சரவணக்குமாரும் இணைந்து ஜெயகுமாரை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார்.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து ஜெயக்குமார் மேட்டுப்பாளையம் காவல்நிலையம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் விசாரணை நடத்திய மேட்டுப்பாளைய வட்டாரப் போக்குவரத்து அதிகாரி தியாகராஜன், நடத்துநர் ஷேக் பரீதின் நடத்துநர் உரிமத்தை அடுத்த மாதம் (மார்ச் 13)ம் தேதி வரை ரத்து செய்து உத்திரவிட்டார். அதைபோல், இதுபோன்ற இனிமேல் நடந்து கொண்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என டிரைவர் சரவணக்குமாரை எச்சரித்து அனுப்பினார்.
கோவையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு 40 நிமிடத்தில் செல்ல வேண்டும் என சில தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இலக்கு வைத்து வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் சூழலும் உள்ளது, இதன் காரணமாகவே, நடத்துநர்களும் அவர்களது கோபத்தை மக்களிடம் காட்டுகின்றனர்.இதனையும் அதிகாரிகள் கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.