March 4, 2021
தண்டோரா குழு
கோவையில் பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் பூ மார்க்கெட் சிரியன் சர்ச் ரோடு பகுதியில் வாகனங்களை தடுத்து நிறுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பினை கடந்த மாதம் 26-ம்தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டதிலிருந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.இதன்படி கோவையில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையிலும், தேர்தல் நன்னடத்தை விதிகளை கண்காணித்திடும் வகையிலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வாக்காளர்களுக்கு வழங்க வாகனங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றதா என பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக பூ மார்க்கெட் சிரியன் சர்ச் ரோடு பகுதியில் இருந்து வடகோவை செல்லும் சாலையில் இன்று, வாகனங்களை தடுத்து நிறுத்திய பறக்கும் படை அதிகாரி சுப்புலட்சுமி வாக்காளர்களுக்கு வழங்க பணம், பரிசுப் பொருட்கள் ஏதேனும் எடுத்துச் செல்ல படுகிறதா என சோதனை மேற்கொண்டனர்.