April 3, 2020
தண்டோரா குழு
கோவையில் வீடு தோறும் சென்று மளிகை சாமான்கள் வாங்க கூப்பன் வழங்கி நூதன முறையில் பொது மக்களுக்கு உதவி வரும் பா.ஜ.க பெண் நிர்வாகிக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் முக்கிய தொழில்கள் முடங்கியுள்ளதால் தொழிலாளர்கள் பலர் வேலையிழந்து வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கோவை இராமநாதபுரம் 68 வது வார்டு பகுதியில் பா.ஜ.க.தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட செயலாளர் கவிதாராஜன் நூதன முறையில் பொது மக்களுக்கு உதவி வருகிறார்.அவர் 200 ரூபாய்க்கான கூப்பனை வீதி தோறும் சென்று வழங்கி,அந்தந்த பகுதியில் உள்ள மளிகை கடைகளின் பெயர்களை கூப்பனில் குறிப்பிட்டுள்ளார்.இது போன்று இராமநாதபுரம், பஜனை கோவில் வீதி,சூரியன் நகர் என சுமார் 20 க்கும் மேற்பட்ட பகுதிகளில் இது வரை 700 கூப்பன்கள் வரை வழங்கியுள்ளார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் பேசுகையில்,
இது போன்று நேரங்களில் பல்வேறு உதவிகள் கிடைத்தாலும்,இது போன்று கூப்பனகள் கிடைத்ததால் தங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் தேவையான பொருட்களை வாங்க முடிகிறது என தெரிவித்தனர். ஊரடங்கு உத்தரவு நேரத்தில் பல்வேறு உதவிகளை தன்னார்வலர்கள் பலர் செய்து வரும் வேளையில் இது போன்று நூதனமாக இவர் உதவி வருவதை பொது மக்கள் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.