July 30, 2018
தண்டோரா குழு
நுகர்வோர் மன்ற பொறுப்பில் இருப்பதாக கூறி பொதுமக்கள் மற்றும் விசைத்தறி , கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களை மிரட்டி பணம் வசூல் செய்யும் சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாகராயம் பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் நுகர்வோர் அமைப்பில் இருப்பதாக கூறி விசைத்தறி, கைத்தறி, மளிகை கடை வியாபாரிகளின் தகவல்களை தெரிந்துகொண்டு அரசு அதிகாரிகளிடம் சொல்லி விடுவதாக மிரட்டி பணம் பறித்து வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
மேலும் அரசு சலுகைகள் , குடும்ப அட்டை , இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் வாங்கிக் கொடுக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என கூறி அதிக தொகை வாங்கி ஏமாற்றி வருவதாகவும், தேவாங்க குல மக்கள் கட்டிய கோவில் மற்றும் மண்டபத்தில் ஊழல் நடப்பதாக கூறி பொய்யான புகார் அளித்திருப்பதாகவும், மீறி கேட்கும் நபர்களை தனது மனைவி மற்றும் மகளை மானபங்கப்படுத்துவதாக கூறி பொய் வழக்கு போடுவதாக மிரட்டி வருவதாக தெரிவித்தனர். கடந்த இருபது வருடங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் அனைத்து மக்களையும் மிரட்டி பணம் பறித்து வரும் சிவக்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.