October 30, 2021
தண்டோரா குழு
பொள்ளாச்சி அருகே 2 முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்து 3வது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு நம்பர் 10 முத்தூரை சேர்ந்தவர் குப்புசாமி- வளர்மதி இவர்களது மகன் கீர்த்திவாசன் வயது (20). இவர் 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு ஏற்கனவே 2019,2020 ஆகிய இருமுறை நீட் தேர்வு எழுதி உள்ளார்.இதில் இரண்டு முறையும் நீட்தேர்வில் தோல்வி அடைந்ததால் மூன்றாவது முறையாக கடந்த ஆகஸ்ட் மாதம் நீட் தேர்வு எழுதி உள்ளார் .அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கீர்த்திவாசன் நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாக கூறி இந்த முறையும் தோல்வியடைந்து விடுவேனோ என மனவருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்துவிட்டு தனது தாயார் வளர்மதி யிடம் தான் விஷம் குடித்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து கீர்த்தி வாசனை மருத்துவ சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது மாணவன் கீர்த்தி வாசன் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்