September 15, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் நாளை 16-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சிறப்பு அடையாள அட்டை விண்ணப்பித்தவர்கள் தக்க சான்றுகளை வழங்கி சிறப்பு அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID ) க்கான ஆவணங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர் (மணியக்காரர் அலுவலகம்/ VAO office) அலுவலகங்களிலும் 16 .9 .2021 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளில் UDID கார்டுக்கு விண்ணப்பித்து நாளது அதுவரை UDID கிடைக்கபெறாத மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையின் அனைத்து பக்கங்களின் நகல்கள் மருத்துவ சான்று உட்பட ஆதார் அட்டை நகல் குடும்ப அட்டை நகல் அன்மையில் எடுக்கப்பட்ட மார்பளவு புகைப்படம் ஒன்று மற்றும் தங்களது கையொப்பம் அல்லது கைரேகை ஆகியவற்றுடன் தங்களது தொடர்பு எண்ணையும் குறிப்பிட்டு மேற்படி ஆவணங்களை தங்கள் வசிக்கும் பகுதிக்கு உரிய கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் சமர்ப்பிக்கலாம் என்றும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.