February 24, 2021
தண்டோரா குழு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் அரசு விழாக்களில் பிரதமர் மோடி நாளை கலந்து கொள்ள உள்ளார்.கோவை கொடிசியா ஹாலில் அரசு விழாவும், கொடிசியா மைதானத்தில் பொதுக்கூட்ட நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. கொடிசியாவில் நாளை மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ள அரசு விழாவில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி ரூ.12 ஆயிரத்து 400 மதிப்பிலான புதிய திட்டங்களை துவங்கி வைக்கிறார்.
இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். அரசு விழாவினை முடித்து கொண்டு கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
அரசு விழாவில் துவங்கி வைக்க உள்ள திட்டங்கள் குறித்து அரசு துறை அதிகாரிகள் கூறியதாவது:
நெய்வேலியில் ரூ.8 ஆயிரம் கோடியில் 1000 மெகாவாட் உற்பத்தி திறனில் வடிவமைக்கப்பட்ட புதிய அனல்மின் திட்டமான லிக்னைட் அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையத்தை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார். நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 2 ஆயிரத்து 670 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான என்.எல்.சி.ஐ.எல் நிறுவனத்தின் 709 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை அர்ப்பணிக்கிறார்.
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.42 கோடியில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் ரயில்வே பாலாத்தை திறந்து வைக்கிறார். பிரதமரின் நகர்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் திருப்பூர் வீரபாண்டி, மதுரை ராஜாக்கூரில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த குடியிருப்புகள் ரூ.330 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து கீழ்பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டம், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.20 கோடியில் 5 மெகாவாட் சூரிய மின்சக்தி தொகுப்புக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
கோவை, மதுரை, சேலம், தஞ்சை, வேலூர், திருச்சி, திருப்பூர், நெல்லை மற்றும் தூத்துக்குடி உள்பட ஸ்மார்ட் சிட்டி நகரங்களில் ரூ.107 கோடியில் அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள் என மொத்தம் ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.