February 27, 2020
தண்டோரா குழு
நாளை பா.ஜ.க சார்பில் பேரணி நடக்க உள்ள நிலையில் வர்த்தக இடங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாளை பா.ஜ.க சார்பில் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு சசிகுமார் கொலை செய்யப்பட்ட நிலையில் நடத்தப்பட்ட இறுதி ஊர்வலத்தின் போது கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது. பிரியாணி கடைகளில் இருந்து பிரியாணி அண்டா, மருத்துகடையில் இருந்து மருத்துகள், செல்போன் கடையில் இருந்து செல்போன்கள் திருடப்பட்டன. இந்நிலையில் நாளை நடைபெறும் பேரணியின் போது கடைகள், பிரியாணி கடைகள் உள்ளிட்ட வர்த்தக இடங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரியாணி குண்டா”வுடன் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த எஸ்.டி.பி.ஐ கட்சியினர் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பின்னர் பேட்டியளித்த அவர்கள்,
டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்ற பெயரில் சங்பரிவார் அமைப்பினர் கலவரம் நடத்தியுள்ளனர் எனவும் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா , டெல்லியில் நடந்தது வண்ணாரபேட்டையிலும் நடக்கலாம் என தெரிவித்து இருப்பதாகவும், இந்நிலையில் கோவையிலும் பா.ஜ.க சார்பில் பேரணி நடைபெறுவதால் அச்சம் காரணமாக மனு கொடுக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். கடந்த காலங்களில் பேரணி என்ற பெயரில் வன்முறை நடைபெற்றதை போல இந்த பேரணியின் போது வன்முறை நடக்காமல் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் வலியுறுத்தினர்.