February 20, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் பைப்பாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் நாளை ஜல்லிக்கட்டு விளையாட்டினை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவங்கி வைக்க உள்ளார்.
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து உரிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு செட்டிபாளையம் எல்அண்டு டி பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறவுள்ளது.உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஜல்லிக்கட்டு விளையாட்டை தொடங்கி வைத்து பேரூரையாற்றவுள்ளார். இவ்விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த மாடுபிடிவீரர்களும், காளைகளும் கலந்துகொள்ள உள்ளனர். பொது மக்களும் வந்து கண்டுகளிக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்விழாவை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்த காவல்துறை சேர்ந்த அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கால்நடை பராமரிப்புத் துறை, பொதுசுகாதாரத்துறைகள் சார்பில் மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட்டு காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு விளையாட்டை கண்டுகளிக்க பிரம்மாண்டமாக பார்வையாளருக்கான மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவக்குழுக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்புத்துறை சார்பில் தீயணைப்பு வாகனம் ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் தற்காலிக கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.