May 27, 2021
தண்டோரா குழு
கோவையில் ஆக்சிஜன் கிடைக்காமல் நண்பர் உயிரிழந்ததால் அவரது நண்பர்கள் இணைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கென ஆக்சிஜன் வசதியுடன் கூடிய இரு ஆம்புலன்ஸ் சேவையை துவக்கியுள்ளனர்
கோவையில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் போதிய ஆக்சிஜன் வசதி கிடைக்காமல் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கோவையை அடுத்த அசோகபுரம் பகுதியில் ஆக்சிஜன் சரியான நேரத்தில் கிடைக்காததால் அந்த பகுதியை சேர்ந்தவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில்,அவரது நண்பர்கள் இணைந்து ஆக்சிஜன் வதியுடன் கூடிய இரண்டு ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி உள்ளனர். நண்பர்கள் அறக்கட்டளை என்ற பெயரில் துவங்கியுள்ள இந்த ஆம்புலன்ஸ் சேவை துடியலூர்,அசோகபுரம் ,என அந்த பகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு உதவும் வகையில் துவக்கி உள்ளதாகவும்,மேலும் தற்போதையை சூழலில்,ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால், அரசை குறை கூறாமல்,பொதுமக்களாகிய நம்மால் ஆன இது போன்ற உதவிகளை செய்வதால், உயிரிழப்புகளை தடுக்க முடியும் என நண்பர்கள்அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.
மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ் தேவையை எதிர்பார்க்காமல்,ஊர் பொதுமக்களே ஆம்புலன்ஸ் சேவை துவக்கியுள்ளது அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.