February 21, 2021
தண்டோரா குழு
கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை பிடித்த வாடிபட்டியைச் சேர்ந்த மாடுபிடிவீரருக்கு கார் முதல் பரிசாக வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் நான்காவது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ஜல்லிக்கட்டு சங்கமும் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தினர். போட்டியை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். மாடிபிடி வீரர்களின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு போட்டிகளில் பங்கேற்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரம் காளைகளும், 750 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் காளைகளும் போட்டியில் பங்கேற்றன. வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வரும் காளைகளை பிடிக்க காளையர்கள் மல்லுக்கட்டினர்.
காளைகளை பிடித்த காளையர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயங்கள், ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டன. அதிகபட்சமாக 15 மாடுகளை பிடித்த மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சேர்ந்த சந்தோஷ் என்ற மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
13 காளைகளை பிடித்த கார்த்தி என்ற மாடுபிடி வீரர்களுக்கு இரண்டாம் பரிசாக பைக் வழங்கப்பட்டது. 11 காளைகளை பிடித்த திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த கார்த்தி என்ற மாடுபிடி வீரருக்கு மூன்றாவது பரிசாக ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. இதேபோல இரண்டாம் இடம் பிடித்த ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரின் காளைக்கு பைக்கும், மூன்றாவது இடம்பிடித்த அலங்காநல்லூர் அன்பு என்பவரது காளைக்கு ஸ்கூட்டரும் பரிசாக வழங்கப்பட்டன.
வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு அமைச்சர் எஸ்.பி வேலுமணி பரிசுகளை வழங்கினார். இப்போட்டியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.