April 12, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவன பணியாளர்களின் இடத்திற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் நடமாடும் கொரோனா தடுப்பூசி மையத்தை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் இன்று துவக்கி வைத்தார்.
கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து கொரோனா நடமாடும் தடுப்பூசி மையத்தை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி வழங்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தற்போது ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலைங்களிலும் 150 முதல் 200 பேருக்கு என மொத்தம் 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
இந்த சூழலில், தெருத்தெருவாக சென்று தடுப்பூசி செலுத்தும் வகையில் கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கும் நடமாடும் தடுப்பூசி மையம் துவங்கப்பட்டுள்ளது. ஒரு மண்டலத்திற்கு 3 குழுக்கள் செயல்பட உள்ளன.இந்த குழுக்கள் தொழிற்சாலை பணியாளர்கள், வணிக வளாக மற்றும் கடை பணியாளர்கள், பள்ளி பணியாளர்கள், குடியிருப்பு நலசங்கம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பொது இடத்தில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட உள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம்.வணிக நிறுவனங்களில் 50 சதவீத பணியாளர்கள் தான் இருக்க வேண்டும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதிக்க கூடாது. மாநகராட்சியில் உள்ள சந்தைகளிலும் 50 சதவீதம் தான் இயங்க வேண்டும்.மாஸ்க் இல்லை என்றால் அபாரதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனவே அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்.
கொரோனா பாதிப்பில் தமிழகத்தில் சென்னை மாநகரம் முதலிடத்தில் உள்ளது. கோவையில் 20 லட்சம் மக்கள் உள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் எண்ணிக்கை அதிகமாகிறது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் இலவச தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ் அப் எண் உள்ளது. தனியார் நிறுவனங்கள் அழைத்தால் அங்கு சென்று ஊசி செலுத்தப்படும்.
கோவையில் 1500 பெட்டுகள் தயார் நிலையில் உள்ளன. இதனை 3 ஆயிரமாக அதிகரிக்க திட்டமிட்டுளோம்.
தனிப்பட்ட நபர் மாஸ்க் அணியவில்லை என்றால் 200 ரூபாய் அபராதம், 500 ரூபாய் விதிக்க மாநகராட்சிக்கு அதிகாரம் இல்லை. மாஸ்க் அணியாமல் வருபவர்களை பேருந்துகளுக்குள்ளோ அல்லது கடைக்குள்ளோ அனுமதிக்கும் நிறுவனத்திற்கு தான் ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.பூங்காக்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் 50 சதவீத மக்கள் நுழைவதை உறுதி செய்வோம். கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் 100 சதவீத தடை விதிக்க ஆலோசிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.