November 17, 2025
தண்டோரா குழு
கோவை காரிமோட்டார் ஸ்பீட்வேயில் கடந்த 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ரசிகர்களின் மிகுந்த ஆரவாரத்திற்கு இடையே 28வது ஜேகே டயர் எப்எம்எஸ்சிஐ தேசிய பந்தய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இதில் எல்ஜிபி பார்முலா 4 பிரிவில் துருவ் கோஸ்வாமி சாம்பியனாக வெற்றிவாகை சூடினார். பெங்களூருவைச் சேர்ந்த 18 வயதான கோஸ்வாமி, செயிண்ட் ஜோசப்ஸ் கல்லூரியின் 12ம் வகுப்பு மாணவர் ஆவார். இந்தியாவில் மிக நீண்ட காலமாக நடைபெறும் ஒற்றை இருக்கை சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வார இறுதியில் நடந்த நான்கு பந்தயங்களில் மூன்றில் அவர் முத்திரை பதித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 20 சுற்று இறுதிப் பந்தயத்தில் அவர் 7வது இடத்தில் இருந்தார். இந்த நிலையில் பந்தயத்தின் ஆரம்பத்தில் கோஸ்வாமி சிறப்பாக காரை ஓட்டி முன்னிலை பெற்றார், ஆனால் சக வீரர் ருஹான் ஆல்வாவிடம் சிறிது நேரம் பின் தங்கிய நிலையில், பின்னர் மீண்டும் ஆதிக்கம் செலுத்தி வெற்றிக் கோட்டை தொட்டு சாம்பியன் பட்டத்தை வென்றார்.
தில்ஜித்துடன் நடந்த இறுதிப் பந்தயம் பற்றி கோஸ்வாமி கூறுகையில்,
“இது ஒரு நீண்ட பந்தயமாக இருக்கும், நான் பொறுமையாக இருக்க வேண்டும் என்பது எனக்கு ஆரம்பத்திலேயே தெரியும்” என்றார். இதே எல்ஜிபி பார்முலா 4 பிரிவில் அஹுரா ரேசிங்கின் மோனித் குமரன் ஸ்ரீனிவாசன் ரூக்கி பட்டத்தை வென்றார். இதன் ஒரு பகுதியாக நடந்த, பிஐஏ-சான்றளிக்கப்பட்ட பார்முலா 4 இந்திய சாம்பியன்ஷிப்பின் 4வது சுற்று போட்டியில் தென்னாப்பிரிக்காவின் லுவிவே சம்புட்லா அன்றைய தொடக்கப் பந்தயத்தில் சீசனின் முதல் வெற்றியைப் பதிவு செய்தார், கென்யாவின் ஷேன் சந்தாரியா இரண்டாவது பந்தயத்தை வென்றார்.
இறுதிச் சுற்றில் கொல்கத்தா ராயல் டைகர்ஸ் இந்திய வீரர் இஷான் மாதேஷ், சாய்சிவசங்கரனை (ஸ்பீட் டெமான்ஸ் டெல்லி) விட முந்திச் சென்று, மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்த தனது சக வீரர் காசி மோட்லேகருக்குப் பின்னால் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இந்தப் பந்தயத்தில் சம்புட்லா முதலிடம் பிடித்தார். மற்றொரு பந்தயத்தில், பிரெஞ்சு ஓட்டுநர் சாச்செல் ரோட்ஜ் (கிச்சாவின் கிங்ஸ் பெங்களூரு) முதலிடத்தையும், மோட்லேகர் நான்காவது இடத்திலிருந்து முன்னேறி இரண்டாவது இடத்தையும் ஷான் சந்தாரியா (சென்னை டர்போ ரைடர்ஸ்) மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.
ஜே.கே. டயர் வழங்கிய ராயல் என்பீல்ட் கான்டினென்டல் ஜிடி கோப்பையில் சனிக்கிழமை ஒரு போட்டி மீதம் இருந்த நிலையில் தொழில்முறை பிரிவில் பெங்களூரு வீரர் அனிஷ் ஷெட்டி பட்டம் வென்றார். இது இந்தப் பிரிவில் அவர் பெறும் இரண்டாவது பட்டமாகும். ராயல் என்பீல்ட் கான்டினென்டல் ஜிடி கோப்பையின் அமெச்சூர் பிரிவில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த பிரையன் நிக்கோலஸ் பட்டம் வென்றார். இந்த சீசனில் அறிமுகமான இந்தியாவின் புதிய ஒற்றை-மேக் பந்தயத் தொடரான ஜேகே டயர் லெவிடாஸ் கோப்பையில், அன்றைய இரண்டு பந்தயங்களையும் வென்று பாலாஜி ராஜு ரூக்கி பட்டத்தை தட்டிச் சென்றார். ஜெய் பிரசாந்த் வெங்கட் ஜென்டில்மேன் பிரிவில் வெற்றி பெற்றார், கோயம்புத்தூர் வீரர் சிறப்பாக ஆதிக்கம் செலுத்திய ஒரு சீசனில் தனது முத்திரையை பதித்தார்.
இந்தியாவின் தொடக்க வீரர்களுக்கான ஒற்றை இருக்கை போட்டியான ஜே.கே. டயர் நோவிஸ் கோப்பையில் பட்டம் பெறுவதில் நான்கு வீரர்கள் இடையே கடும் போட்டி இருந்த நிலையில்,பொள்ளாச்சியைச் சேர்ந்த லோகித்லிங்கேஷ் ரவி (டிடிஎஸ் ரேசிங்) சீசனின் இறுதிப் பந்தயத்தில் ஷூட் அவுட்டில் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.