January 23, 2020
கோவையில் நகை அடகு நிறுவனத்தில் கூடுதலாக கணக்கு காட்டி 46.72 லட்சம் ரூபாய் மோசடி செய்த மேலாளர், நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் இயங்கி வரும் பூரம் பின்சர்வ் நகை அடகு வைக்கும் நிறுவனத்தில் கணக்கு சரி பார்த்தபோது, தங்க நகைகள் மாயமானதோடு, கணக்கில் குளறுபடி இருந்தது தெரியவந்தது. வாடிக்கையாளர்களுக்கு குறைந்த தொகையை கொடுத்துவிட்டு நிறுவனத்தின் கணக்கில் அதிக தொகை பதிவு செய்து மோசடி நடைபெற்றது ஆய்வில் தெரியவந்தது.
பராமரிக்கப்பட்டு வந்த வாடிக்கையாளர்களின் 5081 கிராம் தங்க நகைகளில், 4650 கிராம் மட்டும் இருந்ததும், சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1150 கிராம் தங்க நகைகள் மாயமானதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, வட்டார மேலாளர் தயானந்தன் அளித்த புகாரின் பேரில் கிளை மேலாளர் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த லட்சுமி, நகை மதிப்பீட்டாளர் பாலக்காட்டைச் சேர்ந்த பிஜூ ஆகியோரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்தனர். மேலும், அதே கிளை நிறுவனத்தைச் சார்ந்த சுபா, விக்னேஷ் ஆகிய இருவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.