March 1, 2021
தண்டோரா குழு
கோவையில் துணிக்கடை ஒன்றில் திருடிய மூன்று பேரை சிசிடிவி உதவியுடன் கைது செய்த போலீசார் மேலும் இரண்டு பெண்களை தேடி வருகின்றனர்.
கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பிரகல்யா என்ற துணிக்கடை ஒன்றில் விலை உயர்ந்த சேலைகள் திருடு போனது. இதுகுறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் துணிகடை நிர்வாகம் சார்பில் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் சிசிடிவிகளை ஆய்வு செய்த போது, விலை உயர்ந்த சேலைகளை குறிவைத்து திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
ஏற்கனவே இவர்கள் கோவை, சென்னை, மதுரை உட்பட பல்வேறு பகுதிகளில் துணிகடைகளில் சேலைகளை திருடி கைது செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. சிறையில் இருந்து சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த அந்த கும்பல் மீண்டும் சேலை திருட்டில் ஈடுபட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் அவர்களை தேடி வந்தநிலையில், தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்த முருகன், மாணிக்கவாசகம்,தனலட்சுமி ஆகிய 3 சேலை திருடர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள இரண்டு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
துணிக்கடைகளில் சேலைகளை திருடும் இவர்கள் அவற்றை தென் மாவட்டங்களுக்கு கொண்டு சென்று அவற்றை விற்பனை செய்து வந்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.