April 16, 2018
தண்டோரா குழு
கோவையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகளை அகற்ற மாநகராட்சியினர் முயற்சிப்பதாக கூறி தள்ளுவண்டி கடை வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
கோவையை அடுத்த வெள்ளலூர் பகுதியில் குடிசை மாற்றும் வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் உள்ளது.இந்த வீடுகளுக்கு அருகேயே மாநகராட்சி சார்பில் கடைகள் சில கட்டப்பட்டு இருந்தது.அதற்கான டெண்டர் முன்னறிவிப்பு ஏதுமின்றி முடிவுற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு கட்டப்பட்ட கடைகளில் விரைவில் வியாபாரம் துவங்க உள்ள காரணமாக,அப்பகுதியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகளை இனி நடத்தக்கூடாது என மாநகராட்சியினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் பல தள்ளுவண்டி வியாபாரிகள் பாதிக்கபடுவதாக கூறி அப்பகுதி வியாபாரிகள் இன்று மாநகராட்சியை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.தங்களுக்கும் மாநகராட்சியினர் கடைகளை கட்டித் தரவேண்டும் என்றும் அரசியல் லாபத்திற்காக சிலர் கடைகளை டெண்டர் விட்டு உள்ளதாகவும் எனவே தங்களுக்கே அனைத்து கடைகளையும் வியாபாரம் செய்ய வழங்க வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.தள்ளுவண்டி கடைகள் அமைக்கவிடாமல் தடுத்தால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளனர்.