February 23, 2021
தண்டோரா குழு
கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் வாடைக்கு குடியிருப்பவர் விஜயா. இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.பூமார்க்கெட் பகுதியில் சாலையோரத்தில் பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வரும் இவர் கடந்த 3 ஆண்டுகளாக வாடகை தராமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அட்வான்ஸ் தொகையும் கழிந்த நிலையில் கட்டிட உரிமையாளர் வீட்டை காலி செய்யும் படி பலமுறை கூறிய நிலையில் வீட்டின் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு போன்றவற்றை துண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அங்கு குடியிருக்க அப்பகுதியில் உள்ள ஒரு செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டார். உடனடியாக செல்போன் டவர் அமைந்துள்ள கட்டிடத்தில் இருப்பவர்கள் விஜயாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விஜயாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் செவி சாய்க்கவில்லை. காவல்துறையினரும் கட்டிட உரிமையாளருக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி காவல் துறையினர் அங்கிருந்து போகும்படி சத்தமிட்டார்.
இந்நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் லாவகரமாக விஜயாவை பிடித்து கீழே இறக்கினர். அதனைத் தொடர்ந்து விசாரணைக்காக விஜயா அழைத்துச் செல்லப்பட்டார். செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட பெண்ணால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.