July 16, 2018
தண்டோரா குழு
கோவை குற்றாலம் அருவிக்கு செல்லும் வழியில் கடுமையான சூறாவளிக்காற்றால்,தேக்கு மரங்கள் அடியோடு சாய்ந்ததால் அதனை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால்,கோவை குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வனத்துறை தடை விதித்துள்ளது.
இந்நிலையில் கோவை குற்றாலம் பகுதியில் தொடர்ந்து சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள தேக்கு மரங்கள்,புளிய மரங்கள் அடியோடு
சாய்ந்துள்ளது.இதனால் மரங்கள் ஒவ்வொன்றையும் அறுத்து அதனை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்,அப்பகுதியில் இருந்த மின் கம்பங்களின் மீது மரங்கள் விழுந்ததால்,மின் கம்பங்களும் சாய்ந்தன.இதனால் மின் இணைப்புகளை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதனால் மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.