October 2, 2025
தண்டோரா குழு
கோவை நகர மக்களுக்கு வாரத்தில் 7 நாளும் 24 மணி நேரமும் சிறப்பாக குடிநீர் சேவை வழங்கி வரும் சூயஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்கள் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு பயிற்சி பட்டறைகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில்,ஊழியர்களுக்கான மனநலம் மற்றும் சுய பாதுகாப்பு குறித்த அமர்வுடன் “சூயஸ் சுகாதார வாரம்-2025” ஐத் தொடங்கி உள்ளது.இதன் திட்ட அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுமார் 50 ஊழியர்கள் கலந்து கொண்டனர். வரும் 3-ந்தேதி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஊழியர்கள் தங்கள் உடல் நலத்தில் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டும் என்பதை இந்த நிகழ்ச்சி வலியுறுத்தியது.
வலுவான, ஆரோக்கியமான பணியிடங்கள் மற்றும் சமூகங்களை உருவாக்குவதற்கான முதல் படி தனிப்பட்ட நல்வாழ்வு என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் இந்த அமர்வில் எடுத்துக் கூறப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு புகழ்பெற்ற உளவியலாளரும் ஊக்கப் பேச்சாளருமான நூர் அகமது தலைமை தாங்கினார். “ஆரோக்கியத்தைப் பேணுதல் உங்களிலிருந்தே தொடங்குகிறது” என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மன அழுத்தத்தை கட்டுப்படுத்தாவிட்டால், அது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில்முறை செயல்திறன் இரண்டையும் எவ்வாறு பாதிக்கும் என்பதை அவர் விரிவாக எடுத்துக் கூறினார்.
மேலும் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கை இரண்டிலும் சமநிலையைப் பேணுவதற்கான பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஊழியர்களுக்கு எடுத்துக் கூறினார். மேலும் அவர் பேசுகையில், நல்ல மன ஆரோக்கியம்தான் மற்ற அனைத்திற்கும் அடித்தளம். மக்கள் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பது அது அவர்களை வேலையிலும் வீட்டிலும் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவும் என்றும் தெரிவித்தார்.
கோயம்புத்தூர் 24×7 நீர் திட்ட பாதுகாப்பு மேலாளர் பங்கஜ் குமார் கூறுகையில், எங்கள் நிறுவனத்தின் வெற்றி என்பது ஊழியர்களை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் இது சாத்தியமாகும். எனவே சுகாதார வாரத்தை ஆண்டுதோறும் பெயரளவில் கடைபிடிக்காமல் ஊழியர்களுக்கு பலன் தரும் வகையில் அதை நடத்த வேண்டும் என்பதை மனதில் கொண்டு இந்த நிகழ்ச்சி எங்கள் நிறுவனம் சார்பில் நடைபெற்றது என்று தெரிவித்தார்.