February 2, 2021
தண்டோரா குழு
கோவையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். அவர் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு அவரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. செந்தில்குமார் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார் .அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
செந்தில்குமாருக்கு அன்னூர் அருகே உள்ள புகழூர் வலசை சேர்ந்த பழனிச்சாமி(55) மற்றும் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்த தேவி ஆகியோர் ஜாமீன் ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அவர்களது ஆவணங்களை நீதிபதிகள் சரி பார்த்தபோது அவர்கள் ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்ட தெரியவந்தது. இதனை அறிந்த நீதிபதி அவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து கோர்ட்டு உதவியாளர் தங்கமணி போலி ஆவணங்களை தாக்கல் செய்த பழனிச்சாமி, தேவி ஆகியோர் மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் பழனிச்சாமி தேவி ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து அரசிடம் பொய்யான ஆவணங்களை அளித்து ஜாமீன் பெற்றதாக வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த அனுஷ்யா தேவி என்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.