February 2, 2018
தண்டோரா குழு
கோவையில் கோடிக்கணக்கில் மோசடி செய்த புருஷோத்தமன்(57) மற்றும் அவரது மகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் 40 க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கோடிக்கணக்கில் மோசடி செய்த புருஷோத்தமன் மற்றும் அவரது மகளை காவல்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை வெள்ளலூர் கனகலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன்(57) வயதான இவர் தனது மகள் கீதாஞ்சலியுடன் வசித்து வருகிறார்.மேலும் கோவை காந்திபுரத்தில் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.இவர் காந்திபுரம் பகுதியில் உள்ள மெட்டி ஒலி திருமண தகவல் மையம் மூலம் இரண்டாவது திருமணத்துக்காக பதிவு செய்திருந்த நிலையில் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 45 வயது பெண்ணும் அந்த தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார்.
திருமண தகவல் மையத்தை நடத்தி வந்த மோகன், வனஜா ஆகியோரது ஏற்பாட்டின்பேரில் புருஷோத்தமனுக்கும்,அப்பெண்ணிற்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது. புருஷோத்தமனின் தொழிலை விரிவுப்படுத்துவதாகக் கூறி அப்பெண்ணின் வீட்டிலிருந்து சுமார் 3 கோடி ரூபாய் வரை பணம் பெற்றதாகவும், அனைத்து சொத்துக்களையும் விற்று பணம் தருமாறு அப்பெண்ணை வற்புறுத்தியதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து சந்தேகமடைந்த அப்பெண் வீட்டார் விசாரித்த போது புருஷோத்தமனுக்கு வேறு பல பெண்களுடன் திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. இதுகுறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் இரண்டு பெண்கள் புகார் அளித்திருந்ததை தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்பேரில் முதலில் போத்தனூர் காவல் நிலையத்தில் மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் இந்த வழக்கு கோவை மாநகர் கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் புருஷோத்தமன் மேலும் 7 பெண்களை திருமணம் செய்து கொள்வதாக மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில், சென்னையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியையிடம் 4 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததும் இதுவரை கோவையை சேர்ந்த 4 பெண்கள், ஈரோடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்,திருப்பூரை சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட 8 பெண்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் புகார் எழுந்தது.
தொடர்ந்து இரண்டாவது திருமணம் செய்ய திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து, பணக்கார பெண்களை திருமணம் செய்ததாகவும், அதன்பின்னர் தொழில் நஷ்டம் உள்ளிட்ட காரணங்களை சொல்லி கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும் காவல் துறையினர் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின.
பின்னர் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த புருசோத்தமனை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர்.இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணத் தகவல் மையம் நடத்தி வந்த வனஜா மற்றும் அவரது கணவர் மோகன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்த நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த புருஷோத்தமனை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் திருச்சியில் தலைமறைவாக இருந்த புருஷோத்தமனை பிடித்த கோவை போலீசார் கோவை அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
மேலும், புருஷோத்தமனின் மோசடிகளுக்கு உடந்தையாக இருந்த அவரது மகளான கீதாஞ்சலியையும் பிடித்து தனித்தனியே விசாரணை நடத்தினர்.விசாரணையில் புருஷோத்தமன் முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாவதாக வடவள்ளி பகுதியை சேர்ந்த உஷாராணி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்ததும் அதற்கு பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகறாரு காரணமாக உஷாராணி மர்மமான முறையில் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், தன்னை ஒரு தொழிலதிபர் என காட்டி கொண்ட புருஷோத்தமன் பல்வேறு இடங்களில் அலுவலகம் அமைத்து ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு மோசடியில் ஈடுபட்டு வந்ததும் பணக்கார பெண்களை விதவை மற்றும் கணவனை பிரிந்து தனித்து வாழும் பெண்களை குறிவைத்து திருமண ஆசை காட்டி லட்சங்கள் கோடிகள் என வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வந்ததும்,அதேபோல் நடுத்தர குடும்ப பெண்களை தன் வலையில் விழ வைத்து அவர்கள் பெயரில் நிறுவனங்கள் துவங்கி அதன்மூலம் தான் வருவாய் பெற்று பின்னர் அந்நிறுவனங்களை நஷ்டப்படுத்தி தலைமறைவாகி மோசடியில் ஈடுபட்டு வந்ததும் அம்பலமானது.
இதையடுத்து தந்தை மகள் என இருவரையும் கைது செய்த போலீசார் கோவை மகளா நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர் படுத்தி 15 நாள் காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.