January 28, 2020
தண்டோரா குழு
சீனாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த எட்டு பயணிகளுக்கு பாதிப்பு இல்லை எனவும், அவர்களை பொது இடங்களில் செல்லக்கூடாது என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
சீன நாட்டில் உள்ள ஹீபெய் மாகாணத்திலுள்ள வுகான் நகரில் இருந்துதான் முதன் முதலாக கொரனோ வைரஸ் பரவியது. இந்த வைரஸால் இதுவரை 100 பேர் வரை இறந்துள்ளனர். மேலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறார்கள்.
இந்நிலையில் சீனாவில் இருந்து நேற்றைக்கு பெங்களூர் வழியாக கோவைக்கு வந்த எட்டுபேரில் , ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 4 பேர் கோவை, 2 பேர் பொள்ளாச்சி, சென்னை மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த தலா ஒருவர் என விமானம் மூலம் கோவைக்கு வந்துள்ளனர். விமான நிலையத்தில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு கொரனோ வைரஸ் பாதிப்புகள் இல்லை என பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டதையடுத்து அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையடுத்து சுகாதாரத்துறை சார்பில் 8 பேரையும், 28 நாட்களுக்கு பொது இடங்கள், திருமண நிகழ்ச்சியில் செல்லக்கூடாது எனவும், சளி , காய்ச்சல், போன்ற பாதிப்புகள் ஏற்பட்டல் உடனே தகவல் தெரிவிக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கு ராசாமணி பேசும்போது,
சீனாவில் இருந்து இந்தியா வரும் பயணிகளை முழுமையாக பரிசோதனை செய்யவும், கண்காணிக்கவும் தமிழக அரசு உத்திரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து கோவை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கபட்டு 24 மணிநேரமும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரனோ வைரஸ் இருக்கிறதா என பரிசோதனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் சீனாவில் இருந்து வந்த , எட்டு பேருக்கு எந்த வித பாதிப்பும் இல்லை எனவும், அவர்கள் சுகாதாரத்துறையின் மேற்பார்வையில் இருப்பதாக கூறினார். கோவையில் கொரனோ வைரஸ் பாதிப்பு துளி அளவும் இல்லை எனத்தெரிவித்தார்.