May 17, 2021
தண்டோரா குழு
கொரோனோ நோயாளிகளுக்கு பயனளிக்கும் வகையில்,ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய இரு பேருந்துகளை தனியார் தொண்டு நிறுவனங்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளனர்.
கோவையில் நாளுக்கு நாள் அவற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் சிகிச்சை பெறுவதற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இவ்வாறு படுக்கைக்காக,ஆக்சிஜன் இல்லாமல் அரசு மருத்துவமனை வாயிலில் காத்திருக்கும் நோயாளிகளுக்காக, கே.ஜி.ஐ. எஸ்.எல் நிறுவனம் மற்றும் தொழில் முனைவோர் கூட்டமைப்பு இணைந்து ஆக்சிஜன் வசதியுடன் கூடிய இரு பேருந்துகளை கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளது.
பேருந்துக்கு 12 பேர் வீதம் 24 நோயாளிகள் சிகிச்சை பெறும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் எனவும் இந்த பேருந்துகளில் ஆக்சிஜன் அளவு குறையும் போது சேவா கேசஸ் நிறுவனம் அவ்வப்போது ஆக்சிஜன் நிரப்பி தருவதாக கூறியுள்ளதாக கோவை அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்தார்.