December 15, 2020
தண்டோரா குழு
வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும் வாபஸ் பெற வலியுறுத்தி கைகளை தட்டி கோஷங்களை எழுப்பி விவசாய சங்கத்தினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு சமீப காலத்தில் கொண்டு வந்த வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவையிலும் அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சியினர் மத்திய அரசை கண்டித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் 100க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து,இரண்டாவது நாளாக இன்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிசாமி தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கைகளை தட்டியபடி மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 52 பேர் கைது செய்யபட்டனர்.