February 14, 2020
தண்டோரா குழு
கோவையில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்தும், 1998ம் ஆண்டு குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இன்று மாலை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
இந்த பேரணியில் அக்கட்சியின் மாநிலபொது செயலாளர் வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில செயலாளர் ராகவன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைகழகம் முன்பாக இருந்து துவங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று ஆர்.எஸ்.புரம் தபால் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. இந்த பேரணியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பேரணியின் முடிவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
கோவையில் நடந்த குண்டு வெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர்.1000 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஆண்டுதோறும் பேரணி, அஞ்சலி நடத்தப்பபடுகின்றது. இது போன்ற சம்பவம் இனி நடக்க கூடாது என்பதற்காகவே இந்த பேரணி நடத்தப்படுகிறது. கடந்த 21 ஆண்டுகளாக பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தடையை மீறி நிகழ்ச்சி நடத்துவதும், பின்னர் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றது என தெரிவித்தார்.
21 ஆண்டுகள் கழித்து தமிழக அரசு இந்த ஆண்டுதான் அனுமதி வழங்கி இருக்கின்றனர். அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி. 1998 ல் நடந்த இந்த துயரம் கோவைக்கு ஏற்பட்ட அவமானம். கோவையில் இறந்த தியாகிகளுக்கு நினைவுசின்னம் இருக்கவேண்டும் எனவே ஆர்.எஸ்.புரத்தில் குண்டு வெடித்த இடத்தில் நினைவு ஸ்தூபி அமைக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி அரசு இதற்கு செவி சாய்க்க வேண்டும். தமிழக அரசு நினைவு தூண் அமைக்க ஆவண செய்ய வேண்டும். பயங்கரவாதிகளுக்கு ஜாமீன் கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் கொலையில் முடியும் என கூறிய அவர், இதற்கு உதாரணம் வில்சன் கொலை என தெரிவித்தார்.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சி.ஏ.ஏ போராட்டத்தை அரசியல் கட்சியினர் தூண்டுகின்றன என கூறிய அவர் திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு பல இடங்களில் ஆத்தரவில்லை என தெரிவித்தார். 2 கோடி கையெழுத்து என்பதை யாரும் நம்ப மாட்டார்கள் என கூறிய அவர், ஒரு கோடி கையெழுத்து என்றால் யாரும் நம்ப மாட்டார்கள் எனவும் , கோடியில் ஓரு கையெழுத்து என்பதுதான் உண்மை எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை குண்டு வெடிப்பு தினம் மற்றும் பா.ஜ.கவின் பேரணி மற்றும் அஞ்சலி கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு ஏ.டி.ஜி.பி ஜெயந்த் முரளி தலைமையில் 3500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.