January 22, 2021
தண்டோரா குழு
கோவை மதுக்கரை வனப்பகுதியின் அருகில் காந்திநகர் பகுதி உள்ளது. இங்கு வன விலங்குகளின் நடமாட்டம் அடிக்கடி இருந்து வரும் நிலையில் சமீபகாலமாக சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும் குடியிருப்புகளுக்கு அருகில் இருக்கும் நாய்களையும் , ஆடுகளையும் இந்த சிறுத்தை வேட்டையாடி வருகின்றது. இதுவரை 10 க்கும் மேற்பட்ட ஆடுகளும், நாய்களும் சிறுத்தையால் வேட்டையாடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் குவாரி ஆபீஸ் பகுதிக்கு வந்த சிறுத்தை ஒரு வீட்டின் காம்பவுன்ட் சுவரில் அமரத்து இருந்தது. அதை அந்த வீட்டில் இருந்தவர்கள் படம் பிடித்துள்ளனர். இந்நிலையில் வீட்டின் காம்பவுன்ட் சுவரில் இருந்த சிறுத்தை, சீனிவாசன் என்பவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை வேட்டையாட முயன்றது. ஆனால் நாய் தொடர்ந்து கத்தவே நாயை விட்டுவிட்டு சிறுத்தை தப்பி சென்றது. சிறுத்தையிடம் கடிபட்ட நாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து வருகின்றது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆடு, நாய் போன்ற வீட்டு விலங்குகளை ருசி பார்த்து இருப்பதால் சிறுத்தை அதே பகுதியில் சுற்றித் திரிவதாகவும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனிடையே சிறுத்தையை பிடிக்க மதுக்கரை வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளதாகவும், சிறுத்தையை பிடிக்கப்பட்டு வேறு வனப்பகுதிக்கு கொண்டு விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிய கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.