December 13, 2020
தண்டோரா குழு
கோவையில் காவல் நிலையத்தில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் சவுக்கத் அலி 32 வயதான இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கின்றனர்.ஆட்டோ ஓட்டுனரான சவுக்கத் அலிக்கும் அதே பகுதியை சார்ந்த சதீஷ் என்பவருக்கும் இன்று மாலை தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த போத்தனூர் போலீசார், பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக சாதாரண பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் சவுக்கத் அலி குடிபோதையில் இருந்ததால் வண்டியை காவல் நிலையத்தில் நிறுத்து விட்டு, காலையில் வந்து அபராதம் கட்டிவிட்டு எடுத்துக்கொள்ள போலீசார் சொல்லி இருக்கின்றனர். மாலை 6 மணி அளவில் போத்தனூர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே சென்ற சவுக்கத்அலி , இரவு 8 மணி அளவில் கையில் பெட்ரோலுடன் மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். காவல் நிலைய வளாகத்தில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். குடிபோதையில் இருந்த சவுக்கத் அலி, மருத்துவர்களின் சிகிச்சைக்கு ஒத்துழைக்க வில்லை.
இதனையடுத்து ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். உடலில் 60 சதவீத காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலைய வளாகத்திலேயே ஆட்டோ டிரைவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.