June 21, 2019
தண்டோரா குழு
கோவைப்புதூர் பட்டாலியன் வளாகத்தில் காவலர்களுக்கான ரத்ததான முகாமை மாநகர காவல் துறை ஆணையாளர் சுமித் சரண் தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் 81 இடங்களில் நடைபெறும் முகாம்களில் 13,868 காவலர்கள் ரத்த தானம் வழங்குகின்றனர். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக கோவைபுதூரிலுள்ள 4 பட்டாலியன் முகாமில் ரத்த தான நிகழ்வை கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் சுமித் சரண் ரத்த தானம் கொடுத்து துவங்கி வைத்தார்.
இதனையடுத்து 8 பெண்கள் உட்பட 566 பேர் ரத்த தானம் வழங்கி வருகின்றனர். இதில் உதவி ஆணையர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட பலர் ரத்த தானம் வழங்கி வருகின்றனர். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஏப்ரல், மே மாதங்களில் கல்லூரி விடுமுறை என்பதால் ரத்த தானம் வழங்குபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ரத்த பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் நோயாளிகளுக்கு தேவையான ரத்தம் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் காவலர்களிடமிருந்து எடுக்கப்படும் ரத்தம் உடனடியாக நோயாளிக்கு பயன்படும் வகையில் இந்த முகாம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த ரத்த தான முகாமை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் மருத்துவர் அசோகன் தலைமையில் ரத்த வங்கியின் மருத்துவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.