August 18, 2018
தண்டோரா குழு
கோவையில் கார் சர்வீஸ் சென்டரில் ஏற்பட்ட தீவிபத்தில், பத்துக்கும் மேற்பட்ட கார்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
கோவை விளாங்குறிச்சி பாலாஜி நகர் பகுதியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான ஆட்டோ கேரேஜ் செயல்பட்டு வருகிறது. கார்களை சர்வீஸ் செய்யும் இந்த கடையில் வழக்கம்போல ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்த ஊழியர்கள் அங்கு செல்வதற்குள் திடீரென தீ வேகமாக பரவி அருகில் உள்ள கார்கள் மீதும் பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியேறி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து சம்பவம் அறிந்து தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியை செய்தனர்.சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். கார்களில் உள்ள பேட்டரியில் இருந்து ஏதேனும் மின்கசிவினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட கார்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.