January 7, 2021
தண்டோரா குழு
கோவை மாநகர் முழுவதும் பறவை காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கு சுகாதாரத் துறையும் கோவை மாநகராட்சி நிர்வாகமும் நோய்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழக சுகாதாரத்துறையின் உத்தரவின் பேரில் கேரள தமிழக எல்லைகள் வழியாக வரக்கூடிய வாகனங்களுக்கு கிருமிநாசினிகள் தெளித்து தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் கோவையில் நேற்று திடீரென மழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாகவும் நோய்கள் பரவாமல் இருப்பதற்காக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி உத்தரவின்பேரில் கோவை மாநகர சுகாதார துறையும் கோவை மாவட்ட நிர்வாகம், மற்றும் மாநகராட்சி ஊழியர்களும் கோவை மாநகர் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகள் மற்றும் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளித்து சுகாதாரத்தைப் பேணும் விதமாகவும், நோய் தொற்று பரவாமல் மக்களை பாதுகாக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோழி இறைச்சி கடைகள், ஆட்டு இறைச்சி கடைகள், மீன் விற்பனை அங்காடி போன்ற பகுதிகளில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகளானது முழுவீச்சில் நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கோவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.