October 17, 2020
தண்டோரா குழு
கோவையில் இரண்டு வயது குறைந்த வாலிபரை காதலிப்பதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் தேனூர் அங்காள பரமேஸ்வரி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மகள் நந்தினி (வயது 22). இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக முகநூல் மூலம் கோவையைச் சேர்ந்த 20 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.பின்னர் அது காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
இந்தநிலையில் நந்தினிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு செல்போன் நிறுவனத்தில் வேலை கிடைத்தது இதனைத் தொடர்ந்து அந்த வாலிபரை கோவை வந்து சந்தித்த நந்தினிக்கு சரவணம்பட்டி அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து கொடுத்து, இருவரும் அடிக்கடி சந்தித்து தங்களது காதலை வளர்த்துக் கொண்டனர்.இந்த விவகாரம் வாலிபரின் குடும்பத்துக்கு தெரியவந்தது. அதன்பேரில் வாலிபரின் பெற்றோர் அந்த இளம்பெண் பற்றி கேட்டனர். அதற்கு அவர் தன்னை விட இரண்டு வயது அதிகமானவர் என கூறினார். இது வாலிபரின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வாலிபரின் பெற்றோர் நந்தினியின் பெற்றோரை நேரில் சந்தித்து எங்களது மகனை விட உங்கள் மகளுக்கு 2 வயது அதிகம் எனவே எங்கள் மகனிடம் உங்கள் மகள் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்திக் கொள்ள சொல்லுங்கள் என்று கூறினார்கள்.இதையடுத்து நந்தினியிடம் அந்த வாலிபரிடம் பேச வேண்டாம் என பெற்றோர் அறிவுரை கூறினார்கள். இதனால் மனவேதனை அடைந்த நந்தினி தங்கும் விடுதியில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பீளமேடு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.