April 3, 2020
தண்டோரா குழு
கணபதி சங்கனூர் சாலையிலுள்ள மதுபான கடையில் கள்ளச்சந்தையில் மது விற்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை கணபதி சங்கனூர் சாலையில் மதுபானக்கடையின் பின்புறம் சட்டவிரோதமாக செயல்பட்ட மது விற்பனை கூடத்தை அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்கிருந்த 75 ஆயிரம் மதிப்பினாலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கொரொனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மதுபான கடைகள், பார்கள் மூடப்பட்டன. இதனையடுத்து கள்ளச்சந்தையில் மது விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்நிலையில் கோவை கணபதி சங்கனூர் சாலையில் செயல்படும் மதுபான கடை எண் 1599 ன் பின்புறம் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் மதுபான விற்பனையானது நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு புகார் வந்தது.
இதனையடுத்து வடக்கு வட்டாட்சியர் மகேஸ் தலைமையிலான குழுவினர் சட்டவிரோதமாக விற்பனை நடைபெற்ற தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் சோதனை செய்தனர். அப்போது கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்காக மதுபானங்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து 75000 ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.மேலும் சட்டவிரோதமாக மதுவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட
பார் உரிமையாளர் பரமசிவம்,செல்வம்
சேகர்செல்வம் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வந்த கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.