February 2, 2021
தண்டோரா குழு
கோவையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுபடுத்த வேண்டும், முத்திரை தாள் கட்டணத்தை குறைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை ஆத்துப்பாலம் பகுதியில். கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் முகம்மது ரபீக் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ராக்கி கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தை சுகுணா புரம் பகுதி கழக பொறுப்பாளர் மு. ராஜேந்திரன் ,மற்றும் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் இராம வெங்கடேசன்,பாலகிருஷ்ணன், தணிகை ராஜேந்திரன்,இராதா மணி ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் சிமெண்ட் மணல் கம்பி உள்ளிட்ட பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கட்டுமான பணிகள் பாதிப்படைந்து, கட்டுமான பணியாளர்கள் வேலையில்லாமல் தவித்து வருவதால் ,கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுபடுத்த விலை நிர்ணய குழுவை அமைக்க வேண்டும்,முத்திரைத்தாள் கட்டணத்தை மற்ற மாநிலங்களில் உள்ளது போல 5 சதவீதமாக குறைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மணல் லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் மணி,முன்னால் கவுன்சிலர் முருகேசன் அய்யாசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.