September 3, 2018
தண்டோரா குழு
கடன் தொல்லையால் தாய் ,தந்தையை கொன்றுவிட்டு ,மகன் தற்கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஆவாராம்பாளையம் பகுதியிலுள்ள ஆவாரம் பூ அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பபவர் பாலமுருகன். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், வைரமுத்து (28) என்ற மகனும் உள்ளனர். வைரமுத்து கோவையில் அண்ணாமலை என்ற பெயரில் டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வைரமுத்து திருப்பூரிலுள்ள அவருடைய சித்தி மகாலட்சுமிக்கு கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், சொத்து விபரம் பற்றியும் கடிதம் எழுதிவிட்டு, அத்துடன் வீட்டின் சாவியை கூரியர் மூலம் நேற்று அனுப்பியுள்ளார்.
இன்று மாலை கடிதத்தை படித்த சித்தி மகாலட்சுமி கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு காவல் துறையினர் வீட்டை உடைத்து பார்த்தனர். அப்பொழுது பாலமுருகன் மற்றும் லட்சுமி தம்பதிகளின் கை , கழுத்து பகுதியில் அறுக்கப்பட்டும், வைரமுத்து தூக்கிட்டு் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மூன்று பேரும் உயிரற்ற நிலையில் கிடந்துள்ளனர். இதையடுத்து மூன்று பேரின் உடல்களை மீட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக பீளமேடு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, வைரமுத்து எழுதிய கடிதத்தை மகாலட்சுமியிடமிருந்து வாங்கிய போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் தொல்லையால் தாய் ,தந்தையை கொன்றுவிட்டு ,மகன் தற்கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.