December 26, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் கடந்த சில தினங்களாக காட்டு யானை ஒன்று அப்பகுதியில் சுற்றி வருவதாக கூறி வந்த நிலையில் யானை ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் காட்டுயானை ஒன்று அவ்வழியே வந்துள்ளது. இது குறித்து வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த வனத்துறையினர் யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர். யானை அவ்வழியே செல்வது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. அதே சமயம் அந்நேரத்தில் பொதுமக்களும் வாகனங்களில் சென்று வருவதும் பதிவாகியுள்ளது.
அப்பகுதிகளில் இரவு நேரங்களில் யானை நடமாட்டம் இருப்பதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர். கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இரவு நேரங்களில் மக்கள் வெளியில் நடமாடுவதால் அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்றும் எனவே அப்பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறையினர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.