November 5, 2020
தண்டோரா குழு
கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் உள்ள அமிர்த ஜோதி காலனி பகுதியில் வசித்து வரும் தம்பதி சிவமுருகன் (50) மற்றும் வைர ராணி (40). இவர்களுக்கு சுபஸ்ரீ (22), ஹேமா (19) என இரண்டு மகள்கள் உள்ளனர். சுபஸ்ரீ அருகில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை முடித்துவிட்டு வீட்டில் இருந்த நிலையில் இரண்டாவது மகள் ஹேமா கல்லூரியில் இளங்கலை படித்து வந்துள்ளார். சிவமுருகன் பால் பாக்கெட் போடும் வேலை பார்த்து வந்த நிலையில், அதில் போதிய வருமானம் இல்லாமல் கூடுதலாக கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சிவமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் நால்வரும் விஷம் அருந்தியதாகத் தெரிகிறது. இதில் ஹேமா தவிர மற்ற மூவரும் உயிரிழந்த நிலையில் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வடவள்ளி காவல்துறையினர் மூவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக நான்கு பேரும் விஷம் விஷம் அருந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.