April 13, 2020
தண்டோரா குழு
ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகனங்களில் மஞ்சள் பெயிண்ட் அடித்து கோவை மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்
கொரோனா வைரஸின் தாக்கத்தால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தனிமனித இடைவெளிகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர யாரும் வெளியே வரக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலையில் அனாவசியமாக வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில்,கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அனாவசியமாக இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிவதாக புகார்கள் எழுந்தது. அதனடிப்படையில் போலீசார் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவுகளும் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில்,போலீசார் தற்போது அனாவசியமாக பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அவர்கள் ஓட்டி வரும் இரு சக்கர வாகனங்களில் மஞ்சள் பெயிண்ட் அடித்து எச்சரிக்கை விடுக்கின்றனர்.இதனை தொடர்ந்து, இரண்டாவது முறை பயணித்தால் மீண்டும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.பின்னர் மூன்றாவது முறை தொடரும் பட்சத்தில் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது.
இதையடுத்து,இன்று கவுண்டம்பாளையம் அருகே போலீசார் அனாவசியமாக பயணிக்கும் பல வாகனங்களில் முதற்கட்டமாக மஞ்சள் பெயிண்ட் அடித்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.