June 12, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் தினமும் 3 ஆயிரம் பேர் வரை கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று குறைந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மட்டுமே பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக அரசின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா நோய்த் தொற்று குறைந்து கொண்டே வருகிறது.
இதனிடையே மாவட்டத்தில் ஊரடக பகுதிகளில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து காணப்பட்ட போது 228 கிராம ஊராட்சிகளில் 3ஆயிரத்து 30 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.இதில் பலரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தொற்று குறைந்ததின் காரணமாக தற்போது இதில் 59 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் 241 கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இங்கு 3030 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளன. இதில் பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் 7 பேரும், சூலூர் வட்டாரத்தில் 51 பேரும், மதுக்கரை வட்டாரத்தில் ஒருவரும் என மொத்தம் 59 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அறிகுறி இன்றி தொற்று உறுதி செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள வசதி இல்லாதவர்கள் மட்டுமே இந்த மையங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 2971 படுக்கைகள் காலியாக உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.