April 15, 2021
தண்டோரா குழு
கோவையில் உள்ள ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை தமிழகத்தில் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டை விட மிக மோசமாக உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை எல்லைத்தாண்டி, கைமீறி விட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து கோவை மாவட்டத்திலும் வேகமாக பரவி வரும் நிலையில் கோவை அரசு மருத்துவமனை,இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் தனியார் மயமான கொடிசியா வளாகம், பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் படுக்கை வசதிகள் மாவட்ட நிர்வாகம் அதிகமாக ஏற்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து இது போதாது பட்சத்தில் கோவையில் உள்ள ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ரயில் பெட்டிகள் கொரோனா வார்டு பெட்டிகளாக மாற்றக்கூடிய ஏற்பாடு விரைவில் நடக்கும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்,பொது இடங்களில் எச்சில் துப்புவது தவிர்க்கவும், 2 மீட்டர் இடைவெளி அவசியம் கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளது.இவைகளை கடைப்பிடிக்க தவிர்த்தவர்களுக்கு 200 மற்றும் 500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.தற்போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தொடர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வந்துள்ளது.