April 12, 2021
தண்டோரா குழு
கோவை காந்திபுரம் பகுதியில் தனியார் உணவகத்திற்குள் புகுந்து பணியாளர்கள் மற்றும் பெண்களை தாக்கிய உதவி ஆய்வாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி உணவக உரிமையாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
கோவை காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் நேற்று இரவு 10.20 மணியளவில்,உணவு சாப்பிட்டு கொண்டிருந்த பெண் உட்பட பொதுமக்கள் மற்றும் ஊழியர்களை காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து என்பவர் கடுமையாக தாக்கினார்.
இந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் முத்துவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.இந்நிலையில் பாதிக்கப்பட்ட உணவக உரிமையாளர் மோகன்ராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், புகார் பெட்டியில் மனுவை போடும் படி போலீசார் தெரிவித்ததால்,மனுவை புகார் பெட்டியில் செலுத்தினர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய மோகன்ராஜ்,
இரவு 11 மணி வரை கடை செயல்பட நேரம் உள்ள நிலையில் காட்டூர் போலீஸ் உதவி ஆய்வாளர் கடைக்குள் புகுந்து ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை கடுமையாக தாக்கினர். பசி என்று கேட்டதால் பெண்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவு வழங்கினோம் ஆனால் உள்ளே புகுந்த உதவி ஆய்வாளர் கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாகவும்,இதில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் 3 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இது முதல் முறை சம்பவம் அல்ல இதே போல் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வியாபாரிகளை சில போலீசார் அச்சுறுத்துவதாகவும்,இம்மாதிரி கொடுரமாக நடக்கும் போலீஸ் அதிகாரிகள் மீது பணியிட மாற்றம் நடவடிக்கை போதாது பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
அதே போல் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்க சென்றோம் ஆனால் தேர்தல் விதிமுறைகளால் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்க கூறுகின்றனர். தாக்குதல் நடக்க காரணமானவர்கள் எவ்வாறு உரிய விசாரணை செய்வார்கள், எனவே உரிய நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.