April 5, 2020
தண்டோரா குழு
ஊரடங்கு காரணமாக கோவையில் இறைச்சி விலை உயர்ந்து காணப்பட்டாலும், மக்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேசமயம் இறைச்சி கடைகள் மாநகராட்சியின் அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றாமல் இயங்கி வருகின்றன.
ஊரடங்கின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நாளான இன்று சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட இறைச்சி வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். இறைச்சி கடைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாக இறைச்சி விலை அதிகரித்துள்ளது. கறிக் கோழி ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி 580 ரூபாய்க்கும், மட்டன் ஒரு கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகமாக இருந்தாலும், மக்கள் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டினர். வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆடுகள் மற்றும் கோழி வருவது குறைந்து இருப்பதால், இறைச்சி விலை அதிகரித்து காணப்படுவதாக கறிக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
அதேசமயம் மாநகராட்சி பகுதிகளில் மக்கள் கூட்டமுள்ள குறுகலான இடங்களில் இறைச்சி கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் கறிகளை தொங்கவிடக்கூடாது, வாடிக்கையாளர்களை 30 விநாடிகளுக்கு மேல் நிற்க வைக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவை பெரும்பாலான கறிக்கடைகள் பின்பற்றாமல் இயங்கி வருகின்றன.