May 9, 2021
தண்டோரா குழு
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் நாளை முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மதியம் 12 மணி வரை செயல்பட்டு வந்த அனைத்து கடைகளும் இன்று இரவு 9 மணி வரை செயல்படவும் அனுமதி அளித்துள்ளது.இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை அன்று மூடப்பட்ட இறைச்சி கடைகள் இன்று ஒரு நாள் இரவு வரை செயல்படுகின்றன. எனவே பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் இறைச்சிகளை வாங்க காலையிலிருந்து வந்த வண்ணம் உள்ளனர்.
அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் கோவையில் அனைத்து இறைச்சி கடைகளிலும் ஒரு மீட்டர் இடைவெளிக்கு வட்டங்கள் போடப்பட்டு உள்ளது.இறைச்சியை வாங்க வரும் பொதுமக்களும் சமூக இடைவெளியை பின்பற்றி இறைச்சியை வாங்கி செல்கின்றனர். அதுமட்டுமின்றி காவல்துறையினரும் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
கடந்த இரு வாரங்களுக்கு பின் ஞாயிற்றுக்கிழமையில் இறைச்சிக் கடைகள் திறக்கப்பட்டதால் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது.