November 3, 2020
தண்டோரா குழு
ஆன்லைனில் பணம் வெல்ல முடியாத விரக்தியில் கோவையில் சிஎன்சி ஆப்பரேட்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சுந்தராபுரம் மச்சாம்பாளையம் ரவுண்ட் ரோட்டை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (32). இவர் 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு தனியார் கம்பெனியில் சிஎன்சி ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார். திருமணமாகவில்லை. இவருடைய பெற்றோர் இறந்து விட்டதால் தனது உறவினர் ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அதற்காக நிறைய இடங்களில் கடன் வாங்கி பணம் செலவு செய்துள்ளனர். அதனை அவரால் கட்ட முடியவில்லை.
மேலும் அவருக்கு சமீபத்தில் ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் தொற்றிக்கொண்டது. வேலைக்கு செல்லாமல் முழுநேரமும் அதிலேயே கவனத்தை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அவரால் பணத்தை வெல்ல முடியவில்லை. இதனால் சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு கோவை சீரநாயக்கன்பாளையத்தில் தனியார் வங்கி ஊழியர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. தொடரும் தற்கொலைகளால் ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துள்ளது.