May 18, 2021
தண்டோரா குழு
கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் அமைப்பதற்கான பணிகளை அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை குறைக்கும் நடவடிக்கையாக கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்துக்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுவரும் கொரோனா சிகிச்சை மையத்துக்கான அரங்குகள் அமைக்கும் பணிகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா, கோவை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். தொடர்ந்து சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியிலும் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.