January 25, 2020
தண்டோரா குழு
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் பாஜக அரசு கடுமையாக விமர்சித்த அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமியை கட்சியில் இருந்து அதிமுக நீக்கியது. அதாவது கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அதிமுக அறிவித்தது. மேலும் கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளகூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையில்,கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்ட போதிலும் இணையதளத்திலும் தான் பயன்படுத்தும் லெட்டர்பேடிலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.இதையடுத்து,அதிமுகவை சேர்ந்த முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி புகாரின் பேரில் கே.சி.பழனிசாமி மீது 11 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கே.சி.பழனிசாமியை
இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கே.சி.பழனிசாமியை மேல்
விசாரணைக்காக சூலூர் காவல் நிலையத்துக்கு, போலீசார் அழைத்துச் சென்றனர்.