December 31, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக கோவையின் பிரதான சாலைகளில் கொண்டாட்டங்கள் ஏதுமின்றி களை இழந்து காணப்பட்டது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவையில் ஆங்கில புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படும். குறிப்பாக மாநகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து பரபரப்பாக காணப்படும். ஆனால் இந்த முறை ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதால் பொது இடங்களில் கூடி புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட தமிழக அரசு தடை விதித்தது.
இதன் காரணமாக கோவையில் உள்ள நட்சத்திர விடுதிகள், கேளிக்கை மன்றங்கள் மற்றும் பார்கள் இரவு 10 மணிக்கு மேல் இயங்க தடை விதிக்கப்பட்டது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் இரவு நேரங்களில் அதிவேகமாக சென்று புத்தாண்டு கொண்டாட முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மது அருந்தி வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கைது நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் எனவும் மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்திருந்து.
அவிநாசி சாலை, திருச்சி சாலை, 100அடி சாலை, நஞ்சப்பா சாலை, பந்தய சாலை உள்ளிட்ட 35 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் 1500 காவலர்கள் தீவிர வாகன தணிக்கை மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் வாகனத் தணிக்கை காரணமாக அவிநாசி சாலையில் 9 மணியளவில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழக அரசின் புத்தாண்டு கொண்டாட்ட தடை உத்தரவால் 10 மணி அளவில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், நட்சத்திர விடுதிகளில் உள்ள பார்கள் மூடப்பட்டன. முக்கிய சாலைகளில் உள்ள மேம்பாலங்கள் அனைத்தும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன. இதன் காரணமாக பெரும்பாலான சாலைகளில் வழக்கத்துக்கு மாறாக வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டது.
குறிப்பாக அவினாசி சாலை, திருச்சி சாலை பந்தய சாலை, கூட்செட் சாலை உள்ளிட்ட சாலைகள் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஏதுமின்றி களை இழந்து காணப்பட்டது. உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ, டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் உள்ளிட்ட தேவாலயங்களில் காவல்துறை சிறப்பு அனுமதியுடன் நள்ளிரவில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதில் குறிப்பிட்ட அளவிலானோர் மட்டும் முகக்கவசம் அணிந்து தனி நபர் இடைவெளியுடன் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இதில் 2021 ஆம் ஆண்டில் உலக நன்மை, ஒற்றுமை, வளர்ச்சி உள்ளிட்டவற்றுக்காகவும், கொரோனா நோய் தொற்று உலகிலிருந்து அகலவும், தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண குணம் அடைய வேண்டியும், தொற்று பாதித்து உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டியும் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.